கா கா என்று நம் வீட்டு சாப்பாடை வைத்து பறவையை அழைத்து சோறு போடும் அளவுக்கு நம் கலாச்சாரம் இருந்தாலும் ஏனோ காக்கா , குருவி என்று சொல்லுமளவுக்கு தான் நம்மில் பலருக்கும் பறவைகளை பற்றி தெரியும். நம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுவாக தென்னை, மா, பலா, கொய்யா மரங்கள் வீட்டை சுற்றி உள்ளதால் 15 வகை பறவைகளையாவது வீட்டை சுற்றி பார்க்க முடியும். அரிசி காக்கா, அண்டங்காக்கா இரண்டு வகைகளையும் நம் வீட்டை சுற்றியும், குப்பை தொட்டிகள் அருகிலும் பார்க்க முடியும். காக்கா என்றால் பகிர்ந்து உண்ணும் என்றெல்லாம் நம் சிறுவயதில் சொல்லி கொடுத்திருந்தாலும் , நிஜத்தில் காகம் மற்ற பறவை இனங்களை தொல்லை படுத்தும் இனம். காகங்களுக்கு மனிதர்கள் உணவு பழகிவிட்டதால் அவற்றை எளிதாக எடுத்து உண்டுவிட்டு மற்ற பறவைகளை கொத்துவதும் , அவற்றின் கூடுகளை அழித்தும் வருகின்றன. இதனால் நம்மை சுற்றி நிறைய காகங்கள் இருந்தால் நம் சுற்றுப்புறம் சுத்தமாகவும் இல்லை என்று அர்த்தம்.
வால்காக்கை பறவை நல்ல நீண்ட வாலுடன் , சத்தத்துடன் நம்மை சுற்றி இருக்கும் பறவை என்றாலும் இவற்றை பலரும் கவனித்திருக்க மாட்டார்கள். திடீரென்று ஒரு நாள் நம் வீடு மாமர கிளையிலோ , கரண்ட் கம்பியிலோ இதை பார்க்கும் போது , எப்படி இந்த அழகான பறவையை இத்தனை நாள் நாம் கவனிக்கவில்லை என்று தோன்றும். பொதுவாக இந்த பறவை இனத்தை ஜோடியாக பார்க்கலாம்.
தேன்சிட்டு பறவையை பார்க்காதவர்கள் இருக்க முடியாது, முருங்கை மலர் போன்ற சிறிய மலரில் கூட அதன் நீண்ட அலகை வைத்து தேன் உறிஞ்சும் இந்த சிறிய பறவை எப்பொழுதும் படபடவென்று இருக்கும். அமெரிக்காவில் உள்ள ஓசனிச்சிட்டு பறவையை பார்த்து அதிசயிக்கும் நாம் , நம்மை சுற்றி எப்பொழுதும் இருக்கும் இந்த சிறிய பறவையை ஏனோ முக்கியமாக கருதுவதில்லை. தேன்சிட்டு பறவை ஆணும் பெண்ணும் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும்.
மரங்கொத்தி பறவைகள் பெயருகேற்றது போல மரங்களை கொத்தி துளையிடும். அந்த ஓட்டைகளை துளை போட முடியாத மற்ற பறவைகள் உறைவிடமாக உபயோகித்து கொள்ளும். காட்டில் பலவிதமான மரங்கொத்திகள் இருந்தாலும் பொன்முதுகு மரங்கொத்தியை மட்டுமே வீட்டை சுற்றி உள்ள மரங்களில் பார்க்க முடியும். ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு தாவும் போது நீண்ட குரல் கொடுத்துக்கொண்டே செல்லும்.
நம் நாட்டில் உள்ள மிக சிறிய பறவை பூங்கொத்தி பறவையாகும். வீட்டை சுற்றியுள்ள பழங்களை உண்ணும் இந்த பறவையின் சத்தத்தை எப்பொழுதும் கேட்கலாம், ஆனால் மிக சிறியதாக இருப்பதால் எளிதில் கண்ணில் படாது. மாமரத்தில் வளரும் ஒட்டுண்ணி செடியை இந்த சிறு பறவை தான் மற்ற மரங்களுக்கு பரப்புகிறது, அந்த செடிகள் நிறைய பட்டாம்பூச்சிகளுக்கு உள்ள முக்கிய உணவு செடியாகும். இந்த பறவை மகரந்த சேர்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
செண்பகம் பறவை அதன் சிவப்பு கண்களுடன் புதர்களுக்குள் தத்தி தத்தி நடந்து செல்லும். பெரிதாக பறக்கும் திறன் இல்லாத இந்த பறவையின் முக்கியமான உணவு பாம்பு , பல்லி போன்ற ஊர்வனங்கள். இவை தலையை கீழே தாழ்த்தி தொண்டையை ஊதிக் கொண்டு கத்தும் சத்தம் ஆழ்ந்த முழக்கமாக கேட்கும். இந்த பறவையை தனியாகவோ அல்லது அதன் ஜோடியுடனோ பார்க்கலாம்.
நீல வண்ணத்தில் இருக்கும் வெண்மார்பு மீன்கொத்தி , ஓணான், பல்லிகளை சாப்பிடுவதற்காக வீடுகளை சுற்றி உள்ள மரங்களில் காணலாம். மிக பொறுமையாக ஒரே மரத்தில் வெகு நேரம் அமர்ந்திருக்கும் இந்த பறவை பெரும்பாலும் தனியாகவே இருக்கும். மீன்கொத்தி இனத்தில் உள்ள மற்ற பறவைகள் மீன்களை மட்டுமே உண்ணுவதால் அவற்றை நீர் இருக்கும் இடத்தில் மட்டுமே காண முடியும்.
தையல் சிட்டுக்குருவி இலைகளை ஒன்றுக்கொன்று தைத்து கூடு கட்டும். இவற்றின் நீண்ட, கூர்மையான அலகுகள் பெரிய இலைகளின் ஓரங்களை துளைத்து, தாவர இழைகள், சிலந்தி வலைகள் அல்லது பஞ்சு போன்றவற்றைக் கொண்டு இலைகளை ஒன்றுக்கொன்று தைத்து, முட்டைகளுக்காக பாதுகாப்பான பையைப் போன்ற கூட்டைக் கட்டும். வீட்டிலுள்ள மாமரங்களில் இந்த பறவையின் கூடை பார்க்கலாம்.
நம் ஊரில் நன்றாக பாடும் பறவை என்றால் எல்லோரும் உடனே குயில் என்று கூறுவார்கள். உண்மையில் இனச்சேர்க்கை காலத்தில் மட்டுமே அவை சத்தம் எழுப்பும். ஆண் குயில் , பெண் குயில் இரண்டுமே வேறு மாதிரி இருப்பதால் அவற்றை இரு வேறு பறவைகள் என்று பலர் எண்ணுவார்கள். கருப்பாக இருப்பது ஆண் குயில், புள்ளி வைத்து இருக்கும் பறவை பெண் குயில். குயில் மற்ற பறவைகளின் கூட்டில் முட்டையிட்டு வந்துவிடும், அதனால் குயில் குஞ்சுகளை மற்ற பறவை வகைகளே வளர்க்கும்.
சூரிய ஒளி ஊர் முழுவதும் பரவ ஆரம்பிக்கும்போது, ஒரு அழகிய பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும். மரத்தின் உச்சியிலோ, தண்ணீர் தொட்டியின் மேலேயோ அமர்ந்திருக்கும் வண்ணாத்திக்குருவி தான் அந்த பாடகன். உண்மையில், ஊரில் நன்றாக பாடும் பறவை என்றால் அது வண்ணாத்திக்குருவி தான், குயில் அல்ல. வெள்ளையும் கருப்புமாக இருக்கும் இந்த அழகிய பறவையின் ரீங்காரம் தெளிவாகவும், உயர்ந்த தொனியில் அமைந்ததாகவும் இருக்கும்.
தவிட்டுக் குருவிகள் பொதுவாக குழுக்களாக சத்தம் போட்டுக்கொண்டே சுற்றும் பறவை இனம். புழுக்கள், பூச்சிகள், பழங்கள் என பலவற்றை தவிட்டுக் குருவி உணவாகக் கொள்கிறது. இது தாவரங்கள் மீது இருக்கும் பூச்சிகளை தேடி இலைகளை பிரித்து பார்க்கும்.தவிட்டுக் குருவிகள் மற்ற பறவைகளின் சத்தங்களை செய்து பிற பறவைகளை குழப்பும் திறன் கொண்டவை. இந்த குழுவில் உள்ள பறவைகள் உணவு தேடி தரையில் சுற்றும்போது ஒரு பறவை மட்டும் காவலுக்கு நின்று கொண்டு அபாயம் வந்தால் சத்தம் எழுப்பும்.
இந்தியாவில் மற்ற ஊர்களில் அரிதாக காணப்படும் பச்சை குக்குறுவான் பறவையை கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டை சுற்றியுள்ள மரங்களில் ஏதாவது பழம் இருந்தால் கண்டிப்பாக பார்க்கலாம். இந்த பறவை மரங்கொத்தி தோண்டிய ஓட்டையில் தான் வசிக்கும். இந்த அழகான பச்சை நிற பறவை தொண்டையை ஊதி கொண்டு எழுப்பும் சத்தம் ஊருக்குள் நாள் முழுவதும் கேட்கும்.
கூட்டமாக சுற்றும் மைனாக்கள் நன்றாக பேசும் திறன் கொண்டவை. பூச்சிகள், புழுக்கள், பழங்கள், கொட்டைகள், மனிதர்கள் குப்பையில் கொட்டும் உணவுகள் என பலவற்றை இவை உணவாகக் கொள்கின்றன.இவை பிற பறவைகளின் முட்டைகளை உடைத்து குஞ்சுகளையும் உண்டுவிடும். ஊரை சுற்றி எங்கு பார்த்தாலும் இந்த பறவையை பார்க்க முடியும் என்பதால், காக்காவை போல இந்த பறவையையும் எல்லோருக்கும் நன்றாக தெரியும்.
கிளி வகையில் பச்சை கிளிகள் மட்டுமே ஊருக்குள் காணப்படும் கிளிகள். அவை கூட்டமாக சத்தம் போட்டுக்கொண்டே பறந்து செல்லும். இந்த பறவைகளும் மரங்களில் மரங்கொத்தி கொத்திய ஓட்டைகளில் வசிக்கும். வீட்டில் மா, கொய்யா போன்ற மரங்களில் பழம் இருந்தால் கண்டிப்பாக கிளிகள் சாப்பிட வரும்.
இவற்றை தவிர கரும்பருந்து, செம்பருந்து, ஆசியப் பனை உழவாரன் போன்ற பறவைகளை வீட்டிலிருந்தே வானத்தில் பறப்பதை பார்க்கலாம். சில இடங்களில் புள்ளி ஆந்தை, பச்சை பஞ்சுருட்டான், இரட்டைவால் குருவி போன்ற பறவைகளையும் பார்க்கலாம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு காட்டுக்கோழி, கருஞ்சிட்டு, கொண்டலாத்தி போன்ற பறவைகளை வீட்டை சுற்றி பார்த்திருக்கலாம். இப்பொழுது இந்த பறவைகளை காடுகளின் அருகில் மட்டுமே பார்க்க முடியும். நகரமயமாக்கல் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், நம் வீடுகளைச் சுற்றி பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருவது கவலை அளிக்கும் விஷயம். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. புதிதாக கட்டப்படும் வீடுகளில் பெரிய மரங்கள் வளர்க்கப்படுவதில்லை. மரங்கள் இல்லாததால், பறவைகளுக்கு கூடு கட்ட முடிவதில்லை. வீட்டைச் சுற்றி வளர்க்கப்படும் பல செடிகள், வெறும் அழகுக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன. இவற்றில் பறவைகளுக்கு தேவையான மகரந்தம், காய்கள், கனிகள் கிடைப்பதில்லை.
வீட்டை சுற்றி பூனைகளின் எண்ணிக்கை அதிகமாவதால் பறவைகளால் கூடு கட்டி குஞ்சுகளை வளர்க்க முடிவதில்லை.
பூச்சிக்கொல்லிகள் உபயோகிப்பதால் சிறு பூச்சிகள் இறந்துவிடுகின்றன, அதனால் பறவைகளுக்கு உணவு கிடைப்பதில்லை.
பறவைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து போய்விட்டாலும் , நம் வாழ்க்கை முறைகளை இப்பொழுது மாற்றி கொண்டால் கூட அவற்றை திரும்பி கொண்டு வந்து விடலாம். ஆனால் அந்த முயற்சி ஒரு மனிதனோ, ஒரு வீடோ மட்டும் செய்தால் பத்தாது, மொத்த ஊரும் அந்த மாற்றத்திற்கு தயாராக இருக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையின் எல்லையில் இருக்கும் நம் கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுசூழல் பாதுகாப்பு திட்டங்களுக்கான முன்னோடி மாவட்டமாக இருக்க வேண்டும்