தென் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஈரப்பசை நிறைந்த பசுமைமாறா காடுகளில் நடைபயணம் மேற்கொண்டால் அடிக்கடி கண்களில் படும் முக்கியமான மரங்களில் ஒன்று வெடிப்பலா (Cullenia exarillata).

இந்த மரம் தென் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் ஓர் அகத்திணை (Endemic) இனமாகும். உலகின் வேறு எந்தப் பகுதிகளிலும் இது இயற்கையாக வளருவதில்லை.

வெடிப்பலா மரம் அதன் மிகப் பெரிய அடிமரத் தாங்கு வேர்கள் (Buttresses) மற்றும் செதில்கள் போல உரியும் பட்டையால் எளிதில் அடையாளம் காணப்படுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் கேரளாவின் மழைக்காடுகளில் இது முக்கியமான மேலடுக்கு(canopy) மர இனங்களில் ஒன்றாகும்.
இந்த மரத்தின் மிகவும் சுவாரஸ்யமான அம்சம் அதன் மலர்களாகும். பொதுவாக மலர்கள் பூச்சிகளை கவரும் வகையில் திறந்து காணப்படும். ஆனால் வெடிப்பலாவின் மலர்கள் அடர்த்தியான கொத்துகளாக மரத்தின் கிளைகளிலும் தண்டிலும் தோன்றி பெரும்பாலும் மூடிய நிலையிலேயே இருக்கும். மாலை நேரங்களில் இவை பழங்களைப் போன்ற ஒரு இனிய மணத்தை வெளியிடுகின்றன.

இந்த மலர்கள் பல்வேறு பாலூட்டிகளை ஈர்க்கும் வகையில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. சிங்கவால் குரங்கு (Lion-tailed Macaque), மலபார் அணில், நீலகிரி மந்தி, மற்றும் பல வகை வெளவால்கள் இந்த மலர்களை விரும்பி உண்கின்றன. இவ்விலங்குகள் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு நகரும் போது மகரந்தத்தை எடுத்துச் செல்வதன் மூலம் வெடிப்பலாவின் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
சிங்கவால் குரங்குக்கும் வெடிப்பலா மரத்திற்கும் இடையிலான தொடர்பு மிகவும் முக்கியமானது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே வாழும் இந்த அரிய குரங்கு இனத்திற்கு, ஆண்டின் சில காலங்களில் வெடிப்பலா மலர்கள் முக்கிய உணவாக விளங்குகின்றன. குறிப்பாக காடுகளில் பழங்கள் குறைவாகக் கிடைக்கும் காலத்தில் வெடிப்பலா பூக்கும். இதனால், பழங்களின் பற்றாக்குறையை ஈடுசெய்யும் மாற்று உணவு வளமாக இந்த மலர்கள் செயல்படுகின்றன.

இதன் காரணமாகவே வெடிப்பலா ஒரு முக்கியத் தாங்கு உயிரினம் (Keystone Species) எனக் கருதப்படுகிறது. ஒரு கட்டிட வளைவின் நடுவில் இருக்கும் தாங்குக் கல் அகற்றப்பட்டால் முழு வளைவும் இடிந்து விழும். அதுபோல, வெடிப்பலா மரம் இல்லாமல் போனால் அதைச் சார்ந்திருக்கும் பல விலங்குகளின் வாழ்வும் பாதிக்கப்படும். இதனால் மழைக்காடுகளின் இயற்கை சமநிலையிலும் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம்.
வெடிப்பாலவைப் பாதுகாப்பது ஒரு மர இனத்தை மட்டும் பாதுகாப்பதல்ல; சிங்கவால் குரங்கு உள்ளிட்ட பல அரிய உயிரினங்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதாகும். தென் மேற்குத் தொடர்ச்சி மலையின் மழைக்காடுகளில் இருக்கும் வளமான பல்லுயிர் பெருக்கிற்கு அடித்தளமாக இருக்கும் மரங்களில் வெடிப்பலா மிக முக்கியமான ஒன்றாகும்.

